என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Wednesday, 13 July 2011

மீட்சி

முன் ஒரு மழைக்காலத்தில்
உன்னோடு ஒற்றைக்குடையில்
நனைத்தாய்...
இன்றும் நனைகிறேன்
நினைவுகளின் சாரலில்
எல்லா மழைக்காலத்திலும்....

அஹிம்சை

நகைத்தபடியே வன்முறையை
தூ
ண்டுகிறார் காந்தி
அச்சிட்ட காகிதத்தில்
கச்சிதமாய்.

Tuesday, 12 July 2011

அவளும் ஓர் அந்தி பொழுதும்

விலாசம் இல்லாமல் வீதியில் புரளும் தென்றல்
தென்றலுக்கு தலையாட்டும் பூங்காபூக்கள்
புத்தகபொதி இறக்க வீடுவிரையும் பள்ளி சிறார்கள்
சாலையில் சங்கமிக்கும் வாகன வரிசை
அன்றைய வருவாயை சலிப்போடு எண்ணும் யாசகன்
கண்ணாடி பேழைக்குள் நிகழ்காலத்தை தின்று
சுழலும் மணிக்கூண்டின் கடிகாரமுள்
இப்படி எதையுமே ரசிக்க மனமில்லாமல்
இன்றும் காத்திருந்தேன் உனக்காகவே நான்,


காத்திருப்பது புதிதில்லை ஏனோ
தாமதமாகும் ஒவ்வொரு நொடியும்
உடைந்து உதிரும் என் இதயம்
தூரத்தில் நிழல்ஒன்று நகரத்து நெரிசலில் நசுங்காமல்
என்னை நோக்கி - நிச்சயம் நீதான்
இயல்பு நிலைக்கு திரும்புகிறது இதயம்
தென்றலை உணர்கிறது தேகம்


தாமதத்திற்கு தலை குனிகிறாய் நீ...
உனக்கான அதிகபட்ச தண்டனையே
ஒரு நிமிட மௌனம் -அதுவும்
எனக்கே தண்டனையாய்
மௌனம் உடைத்தாய் வார்த்தைகளை உதிர்த்து
திட்டமிடாமல் நிகழ்த்தப்படும் நம் ஒவ்வொரு
சந்திப்பிலும் அடுத்த இடப்பெயர்வு
அப்போதுதான் தீர்மானிக்கப்படுகிறது


கடற்கரை மணலில் கால் புதைப்பதா?
திரையரங்க இருளில் தொலைந்து போவதா ?
வாதிட்டு இறுதியில் உறுதி செய்தாய் நீயே
என்வீட்டு மொட்டைமாடியை ..
உன்னோடு கைகோர்த்து நடப்பதென்றால்
உலகை வலம்வரவும் சம்மதம் எனக்கு,


சூரியனை விழுங்கி கொண்டிருந்தது அடிவானம்
உன் நிறத்திற்கு சிவந்திருந்தது வானம்
என்வீட்டு மாடியில் என்னோடு நீ
காற்றுக்கு வலிக்காமல் கையசைக்கிறாய்


தலைசாய்த்து கண்ணிமைகிறாய் ....
வார்த்தைகளோடு புன்னகையும் சேர்த்து வீசுகிறாய்
கடிகாரமுற்கள் எத்தனைமுறை சுழன்றனவோ
இமைக்க மறந்த என் விழிகள் உன் அசைவின்
பிம்பங்களை விழுங்கி கொண்டிருந்தன..


உன்னை உரசிய காற்று குளிர்ச்சியாய்
மேகத்தையும் மெல்ல உரசியதோ
சின்னதாய் சில தூரல்கள் என்மீது
விழித்து பார்கிறேன் வெள்ளையாய்
சிரிக்கிறது வானம்....
என் கனவுகளை களவாடிய விடியலுடன்......