என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Sunday, 5 June 2011

பயணம் #4


உன்னோடு 
கைகோர்த்து 
தோள்சாய்ந்து
காதுரச  ரகசியம் பேசி 
சில்மிஷமாய் விளையாடி 
என எண்ணற்ற கற்பனைகளோடு 

ஓடும் பேருந்தின் 
சன்னலில் தொங்கி 
கைக்குட்டை வீசி 
சட்டை கசங்க உள்ளுக்குள் பிதுங்கி 
வென்ற களிப்பில் 
உன் அருகில் அமர்ந்தபின்... 

கையில் குழந்தையுடன் நின்றவளை 
உன்னோடு அமர்த்திவிட்டு 
குழந்தையின் பிஞ்சுவிரல் பிடித்து 
நின்றபடியே வந்த
நம் முதல் நீண்டபயணம் 
திருப்த்தியாகவே  முடிவுற்றது  எனக்கு. 

 

பயணம் #3

பலமுறை கைகுலுக்கியும் 
விடைபெறாத நம்மை 
விடைகொடுத்து இடம் பெயர்த்து 
இடம்பெயராமல் சுழலும் 
கடிகார முட்கள்.

பயணம் #2

பயணப்பட்ட எந்த பயணத்திலும் 
திரும்ப பெற்றதில்லை சரியான சில்லரையை
அடுத்த பயணத்திலாவது 
எதிர்பார்ப்போம் 
ஒரு நல்ல நடத்துனரை அல்லது 
சரியான சில்லரையை.

பயணம் #1

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
எல்லா பயணத்திலும் 
ஒரு சன்னலோர இருக்கையும்,
முகம் சுளிக்காத நடத்துனரும்.